இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விவசாய நிறுவனக் கட்டமைப்பு (AEF), தரவுப் பகிர்வுக் கொள்கை மற்றும் CROPIX தேசிய டிஜிட்டல் தளம் ஆகியன நேற்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிதி உதவியுடன், விவசாய அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முன்முயற்சி, நாட்டின் விவசாய ஆட்சி முறையை நவீனமயமாக்குவதன் மூலம் ஆதாரபூர்வமான முடிவெடுப்பதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
சிதறிக்கிடக்கும் தரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI), அரச நிறுவனங்களுக்கிடையில் திறமையான தரவுப் பகிர்வை அனுமதிப்பதன் மூலம் இத்துறையில் உள்ள தடைகளை நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் உரையாற்றிய விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி. லால் காந்த, இது இலங்கையின் விவசாய ஆட்சியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமையும் என வலியுறுத்தினார். டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ இஞ்சினியர் எரங்க வீரரத்ன குறிப்பிடுகையில், அமைப்புகளுக்கிடையே தானியங்கி தரவு பரிமாற்றம் மூலம் திறமையான சேவைகள் வழங்கப்படும் என்பதால், இனி விவசாயிகள் ஆவண வேலைகளுக்காக அலைய வேண்டியதில்லை எனத் தெரிவித்தார். இதேவேளை, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, இந்த முன்முயற்சியானது தேசிய டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை விவசாயத் துறைக்கு விரிவுபடுத்துவதுடன் தரவு சார்ந்த கொள்கை தாக்கத்தை செயல்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.
CROPIX அமைப்பானது தேசிய பயிர் பதிவேடு, சாகுபடி தரவு, விளைச்சல் கணிப்பு மற்றும் நிகழ்நேர அறிக்கையிடல் ஆகியவற்றை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.





